Sunday, 18 April 2010 at 14:38
நீ பிரிந்து விட்டாய்
பொய்..!
நான் கனவு கண்டு
கொண்டிருக்கிறேன் .
இவ்வாறு ஒரு பக்கம்
தேற்றிக் கொள்ள உன் முகம்
எண்ணத்திரையில் விழுந்து
சிரிக்கிறது.
ஆனால் யதார்த்தம்
உறைக்கும் போது
விழித்திரையில்
நீர் முட்டுகிறது .
கடைசியாய் உன்னுடன்
போனில் பேசிய வார்த்தை
தஸ்தகீர் ..
உடம்பைக் கவனித்துக் கொள்
கடைசியாய் நீ
என்னிடம் பேசிய வார்த்தை போனில்
"மச்சான் எனக்கு
இப்ப பரவாயில்லை "
நீ எனக்கும்
நான் உனக்கும்
படிப்பித்த காலங்களை
நினைக்கும் போது
எனக்கு நெஞ்சு
வெடிக்கப் பார்க்கிறது .
அது ஆண்டு பத்திலிருந்து
கம்பஸ் வரை
தொடர்ந்தது
ஆனால் இன்று
பெரிய படிப்பெல்லாம்
படித்த உனக்கு
எனக்குச் சொல்லித்தர
கொடுப்பினை இல்லை
தொழில் தேவைகளால்
2003 இற்குப் பின்
நாம் இருவரும் சேர்ந்து
செலவளித்த நேரம்
கூட்டிக்கழிக்க
ஓர் ஒன்றரை மணித்தியாலங்கள்
இருக்கும்
ஆங்காங்கே திருமணங்களிலும்
மையத்து வீடுகளிலும்
ஆனால் ஒரு மாதத்திற்கு முன்னர்
ஜுனைதீனின்
ஜனாசாவை எதிர்பார்த்து
அக்கரைப்பற்றில்
எதேச்சையாய் சந்தித்த போது
வழமைக்கு மாற்றமாய்
ஒரு மணித்தியாலத்திற்கும் மேல்
கழித்தோம்
அது விதியா ?
நான் சொன்னேன்
மச்சான் நீ பாஸ்டா
நான் தான் கிடந்து
கஷ்டப்படுகிறேன் ..
அதுக்கு நீ சொன்ன பதில்
நீ ஓடி வந்து
பிடித்து விடுவாய்..
அதுக்காகவா
இப்படி அசுர வேகத்தில்
போய்ச் சேர்ந்திருக்கிறாய்
அடிக்கடி இது
நினைவுக்கு வருவதால்
இன்றிரவு எனக்குத்தூக்கமில்லை
எங்கே நீ போய் விட்டாய் ..
என் நெஞ்சு கிடந்து பதைக்கிறது

தற்செயலாய் இதற்குள் நுழைந்து பார்த்தேன் என்ன நடந்திருக்கிறது என்று... மனசு பதைக்கிறது. ஒன்றாக வேலை செய்த பொழுதுகளும், அழைத்து வைத்து அறிவுரை சொல்லும் அக்கறையும், பழகும்போது பச்சைப் பிள்ளை போல சிரிப்பும், அடிக்கடி முகத்தில் தொங்கும் அடங்காத கோபங்களும், எல்லாருக்கும் உதவி செய்யும் மனமும், எதிலுமே காட்டும் விரைவும் தெளிவும், கடைசியில்,... மரணப்படுக்கையில் கூட மாறாமல் வீற்றிருந்து வரவேற்ற கள்ளமற்ற புன்னகையும் நெஞ்சில் மாறி மாறி காட்சி கொடுத்து, இதயம் விம்மி, கண்ணீரை வரவழைக்கிறது. யா அல்லாஹ்... அன்னாருடைய பாவங்களை மன்னித்து அவருடைய கபுறு குழியை ஒரு மலர்வனமாய் ஆக்கி வைப்பாயாக. மேலான சுவர்க்கத்தை அவருக்கு பரிசளிப்பாயாக. இம்மையில் அவருக்கு சகல செல்வங்களையும் அருளியது போல மறுமையிலும் அவருடைய வாழ்வை வளப்படுத்துவாயாக...
ReplyDelete